Hindu Tamil Cultural Association Enfield (Reg Charity No : 1143043)
ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் என்பீல்ட்

Sri Nagapooshani Ambaal Temple Enfield

திருவருள்மிகு
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்

ஓர் வரலாற்று நோக்கு

அரவணிந்த நாயகி நாளும் உந்தன்
கங்சமென் மலர்பாதம் என் சிரமேல் வைத்தே
அங்சேல் என்றே ஆதரிப்பாய் அனைத்துமாய் நின்ற தாயே
மஞ்சுலாம் என்பீல்ட் நகர் நாகம்மையே துணை நிற்க

தோற்றம்

எமது ஆலயம் 2002 தொடங்கப்பட்டு இவ்வருடத்துடன் 14 ஆவது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு எமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது தாயக மக்களுக்கு உதவுவதற்காகவும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் 2002 ஆம் ஆண்டில் 9 பேரை அங்கத்தவராக கொண்ட அரங்கவாலர்கள் இணைந்து இந்து தமிழ் கலாச்சார சங்கம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதனூடாக சமய சமூக பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றது.அவ்வகையில் அம்பாளின் திருவருளால் என்பீல்ட் பகுதியில் அம்பாளின் ஆலயம் ஒன்றை நிறுவுவதற்காக ஆலோசித்து ஜூலை மாதம் 12 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு ஓர் வெள்ளிக்கிழமை விக்டோரியா வீதியில் அமைந்துள்ள Mordan hall இல் அம்பாளின் திருவுருவப்படம் ஒன்றை வைத்து நமது ஆலய பிரதம குருவாகிய கமலநாத குருக்களும், சிவஸ்ரீ சச்சிக் குருக்களும் இணைந்து பூஜை செய்து வழிபாடு ஆரம்பமானது. அன்று முதல் அதே மண்டபத்தில் பிரதி வெள்ளி தோறும் இவ்வழிபாடு நடைபெற்று வந்தது. அதே ஆண்டில் 25 - 10 - 2002 வெள்ளிக்கிழமை என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் என்ற பெயரில் அம்பிகையின் திருவளச்சிட்டு முடிவின்படி அன்றைய தினமே அம்பாளின் திருவுருவச்சிலை தாபிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதே நாளில் தற்போது ஆலயம் அமைந்துள்ள கட்டிடம் பற்றி கேள்வியுற்று மறுநாளே இக்கட்டிடம் அம்பாளுக்கென்றே வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கட்டிடம் வாங்குவதற்காக ஆலய அரங்கவாலர்கள் ஒன்பது பெரும் நிதி வழங்கினர். அதனோடு 18 திருவிழா உபயகாரர்கள் ஒவ்வொருவரும் தலா 5000 பவுண்டுகள் வழங்கி உதவி புரிந்தமையால் அம்பாளுக்கான சொந்த கட்டிடம் வாங்க முடிந்தது.

வருடம் 2003-2004

07 - 09 - 2003 ம் ஆண்டு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக தேவர்கள், முதலானவர்களோடு அம்பாளுக்கு பஞ்சங்குண்டங்களோடு கூடிய மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து 12 தினங்கள் மண்டலபிஷேகம் நடைபெற்று அதே ஆண்டில் நவராத்திரி, கேதார கௌரிவிரதம் ( புலம் பெயர் நாடுகளின் முதன்முதலாக தனித்தனியாக சிவனுக்கும் அம்பாளுக்கும் இலட்ச நாம அர்ச்சனையோடு கூடிய கௌரி விரதம்) கந்தசஸ்டி விரதம், திருவம்பாவை ஆரம்பிக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு வசந்த நவராத்திரி விழா, சந்திக்க ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டில் அம்பாளுக்கு ஆணி பௌர்ணமியை அடுத்து வரும் திங்கள் விழாக்கள் ஆரம்பித்து 18 தினங்கள் நடத்துவது என அம்பாளின் திருவுளச் சீட்டு முடிவு மூலம் தீர்மானிக்கப்பட்டு சிறிய நாகபூசணி அம்பாள் விக்கிரகமும், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத நாயனமூர்த்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேண்டும் வரங்களை வேண்டுவோர்க்கு வாரிவழங்கும் என்பீல்ட் நாகம்மையின் பேரருளால் 2004 ம் ஆண்டு சித்திரை வருடப் பிறப்பன்று ராகு கால பூஜையும், அடியவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டி கைகளினால் பால் அபிஷேகம் செய்யும் பாக்கியமும் ஆரம்பமாகி இன்று புலம் பெயர் நாடுகளில் இவ்வழிபாடு உன்னத நிலையை அடைந்துள்ளது எனலாம். நமது ஆலயத்தில் நாகசாந்தி வழிபாடு மிக உன்னதமானது. ஏனெனில் நாகபூசணி அம்பாளின் மேனி தீண்டி வழிபாடு செய்யும் மரபில் வந்திருந்த நமது பிரதம குரு சிவஸ்ரீ கமலநாத குருக்கள் அவர்களின் கைகளினால் நாகசாந்தி செய்வது மிக உன்னதமானது. ஏனெனில் அவர்களின் பாரம்பரிய முன்னோர்கள் இத்தகைய நாகசாந்தி செய்யும் தகுதி பெற்றவர்கள். ஒவ்வொரு தலங்களுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. இறைமூர்த்தங்கள் எழுந்தருளும் இடங்கள் மூர்த்தி, தளம், தீர்த்தம் என்பன ஒருங்கே சேருமிடத்து அத்தலம் பெருமை பெறுகின்றது. அவ்வகையில் ஆதிபராசக்தி சுயம்புவாக நயினையில் தோன்றினாள். அடியவர்க்கு அருள்வதற்காக இலண்டனில் என்பீல்ட் நாகபூசணி எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டியதை வாரி வழங்குகின்றாள். அவ்வகையில் அம்பாளின் ஆலயம் நாள் ஒரு மேனியும் பொழுதொன்று வண்ணமும் வளர்ந்து இன்று ஓர் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றாள்.

வருடம் 2005-2014

2005 ம் ஆண்டு முதன் முதலாக கொடியேற்ற மகோற்சவம் நிகழ்கின்றது. 2008 ம் ஆண்டு 100 நாட்கள் கோடி அர்ச்சனையும் நடைபெற்றது. ஓர் உயரிய வரலாற்று நிகழ்வாகும். 2010 ம் ஆண்டு பிள்ளையார்க்கும் புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு விநாயகரும் தேரேறி வருகிறார் அம்பிகையின் அடியவர்களின் தொகையும் நாளுக்கு நாள் வளர்கின்றது. நமது ஆலயத்தில் நாகசாந்தி செய்வதற்காக ஆஸ்திரேலியா, ஜெர்மன், நார்வே, சுவிஸ், கொலண்ட், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் இங்கிலாந்தின் பல பக்கங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து பலன் பெறுகின்றார்கள். ஓர் நாகசாந்தி செய்வதற்கு மூன்று மாத காலத்திற்கு அடியவர்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் தொடர்ந்து நாகசாந்தி செய்வதற்கு அடியவர்கள் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். நமது ஆலயத்தில் பிறந்த நாள், திருமண நாள் என்பனவும் சிறப்பாக நடைபெறுகின்றன. வழிபாட்டு முறைகள் மிக உன்னதமான நிலையில் இருக்க ஆலயம் ஆரம்பித்த காலம் முதல் சமூக சேவை பற்றி நோக்குமிடத்து எமது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி வாரந்தோறும் வாய்ப்பாடு, மிருதங்கம் மற்றும் key board வகுப்புகள் நடைபெறுகின்றது. தாயகத்தில் நிதியிலர், கதியிலர், பதியிலர், குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக நம்முடைய என்பீல்ட் நாகபூசணி அம்பாளின் பெயரால் "தாயின் நிழல் " எனும் செயல் திட்டத்தை உருவாக்கி ஆலய வருமானத்தில் செலவு தவிர்ந்த ஏனையவை அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறன்றது. அம்பிகையின் அடியவர்கள் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என தத்தெடுத்து கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தில் 150 இற்கு மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். புனித பூமி இல்லம், விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றிலும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். தாயகத்தின் பல பாகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எமது ஆலயம் சார்பாக அவர்களின் கற்றலுக்கு தேவையான உதவிகள், நல்லை ஆதீன கட்டிட உதவி, போன்ற இன்னும் பல சேவைகள் எமது ஆலயத்தினால் நடத்தப்படுகின்றன.

வருடம் 2015 முதல்

புலம் பெயர் நாடுகளில் முதன் முதலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு அம்பாளின் ஆசி வேண்டி இவ்வாண்டில் தம்பதி பூஜை நடைபெற்றது என்பதை தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
நிறைவாக என்பீல்ட் நாகபூசணியிடம் நம்பிக்கையோடு சரணடைந்து நல்வாழ்வு எண்ணம் வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன்!

Advertisement